×

ஊட்டியில் சோதனை முயற்சியாக அமைப்பு தமிழக மலைப்பாதைகளில் விபத்து தடுக்க சென்சார் ஹாரன்: அமைச்சர் எ.வ. வேலு பேட்டி

ஊட்டி: ஊட்டி மலைப்பகுதியில் விபத்து தடுக்க சோதனை முயற்சியாக வளைவுகளில் சென்சார் ஹாரன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் மலைப்பாதை வளைவுகளில் அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை  1148 கி.மீ. தூரம் சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் அரசு சார்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில், வேக கட்டுப்பாடு இல்லாமல், ஓட்டுநர்களால் சாலை விபத்து ஏற்படுகிறது.

விபத்தை தவிர்க்க வேண்டும் என்ற முதல்வரின் ஆணையை ஏற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. விபத்து நடந்தவுடன் அவர்களை காப்பாற்றவே இன்னுயிர் காப்போம் திட்டத்தை  முதல்வர் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டம் துவங்கிய மூன்று நாட்களில் 30 மாவட்டங்களில் ஏராளமானோர் ரூ.25 லட்சத்து 15 ஆயிரத்து 500 செலவிடப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலும் சாலை விபத்தில் சிக்கிய ஒரு நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில், 50 இடங்களில் விபத்து நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இப்பகுதிகளில் விபத்து நடக்காதவாறு சாலை சீரமைப்பு பணிகள் நடக்கும். நீலகிரி மாவட்டத்தில் வளைவுகளில் விபத்து ஏற்படாத வகையில் சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி ஒலிப்பான் (சென்சார் ஹாரன்) அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சோதனை முயற்சியாக ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் இந்த தானியங்கி ஒலிப்பான் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கொண்டை ஊசி வளைவுகளிலும் இந்த ஒலிப்பான்கள் அமைக்கப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து மலை மாவட்டங்களிலும் அமைக்கப்படும். நீலகிரி எம்.பி. ராசா கோரிக்கையின் பேரில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். குன்னூருக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, காட்டேரியிலிருந்து கைகாட்டி வழியாக ஊட்டிக்கு ரூ.46.43 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படும். சாலை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த ஆண்டிற்கு ரூ.138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.13.6 கோடி சாலை பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister E.V. Velu , Censor horn to prevent accidents on Tamil Nadu hills: Minister E.V. Velu interview
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...